அரண்மனை 2 :விமர்சனம்

த்ரில்லர்/திகில் காமெடி படங்களுக்கு ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பு இருந்து வருவதால் தனது முந்தைய படமான அரண்மனையின் பிரமாண்ட வெற்றி தந்த நம்பிக்கையில் சுந்தர் சி. மீண்டும் கோதாவில் குதித்து விட்டார். அரண்மனை 2 ல் புதிதாக அவரே சந்திரமுகி ரஜினியாக நடிக்கவும் முயற்சித்து இருக்கிறார்.

அதே அரண்மனை செட், ஜமீன் குடும்பமாக ராதாரவி, சுப்பு, சித்தார்த், த்ரிஷா. முதல் காட்சியிலேயே ராதாரவியை ஒரு அமானுஷ்ய சக்தி அடித்துப்போட அவரோடு படத்தின் கதையும் கோமாவுக்குப் போகிறது. த்ரிஷாவும், சித்தார்த்தும் ஒரு டூயட் பாடி முடித்தவுடன் கதைக்குள்? வருகிறார்கள். அரண்மனைக்கு வைத்தியம் பார்க்க வருபவராக சூரி கிச்சு கிச்சு மூட்டுகிறார். பாவம் நமக்குத்தான் சிரிப்பே வரல, அவருக்கு ஜோடி கோவை சரளா, சரளாக்கா இன்னும் எத்தனை படத்திலதான் நீங்க பேயை ஒன்னுக்கு கூட்டிட்டு போவிங்க, முடியல அக்கா!.

அரண்மனையில் இருக்கும் தன் தங்கையை காண வரும் வனவிலங்கு ஆய்வாளர் சுந்தர்.சி இதன் பின்னணியை ஆராய்கிறார். சித்தார்த்தின் தங்கையான ஹன்சிகாவை அவரின் தந்தை ராதரவியும், அண்ணன் சுப்புவும் சேர்ந்து கொலை செய்தததன் விளைவே இதற்கெல்லாம் காரணம் என தெரிய வருகிறது. துஷ்ட சக்தியின் உக்கிரத்தை அடக்க சுந்தர்.சி செய்யும் முயற்சிகள் எவ்வித பலனை தருகின்றன என்பதுதான் கதை.

இடைவேளை வரை திகில், காமெடி என மாற்றி மாற்றி காட்சிகளை வைத்து எரிச்சலையும், கொட்டாவியையும் தந்திருக்கிறார் சுந்தர். மனோபாலா – கோவை சரளா இதில் அண்ணன் தங்கை. அவர்களுடன் சூரி இணைந்து செய்யும் காமெடி முடியல. ராதாரவி கோமாவில் இருந்தே செத்துப்போகக் கூடாது என்பதற்காக இரண்டொரு காட்சிகளில் நடித்திருக்கிறார். இடைவேளைக்கு முன்பு பேய் பற்றிய முடிச்சு அவிழ்கிறது..

சுப்பு காணாமல் போகிறார். ஆனால் அவர் இன்னொரு வீட்டுக்கு போனால் வரமாட்டார் என அவர் மனைவி சொல்கிறார். கடைசி வரைக்கும் அவர் என்ன ஆனார் என அவர்கள் தேடவே இல்லை. ஒரு வேளை அவரின் முடிவு நமக்குத் தெரிந்தால் போதும் என நினைத்திருக்கலாம்.

ஹன்ஷிகா பேயாக வருகிறார். அப்புறம் த்ரிஷா பேயாக வருகிறார். அப்புறம் ஒருத்தர் … சரி வேனாம் விடுங்க அது ட்விஷ்ட்டுன்னு நெனைச்சு வச்சிருக்கலாம்..

இசை ஹிப் ஹாப் தமிழா, ஒரு பாட்டும் மனசில நிற்கல. கிளைமாக்சில் குஷ்பு!, ஆமாம் குஷ்பூவேதான் ஒரு பேயாட்டம் ஆடுகிறார். குடும்பப் படம் என்று காட்ட நினைத்திருக்கிறார்கள் போல . படத்தின் நாயகன் சூரியா?, சுந்தர்.சியா? எனக் குழப்பமாக இருக்கிறது. சித்தார்த் அமெரிக்க மாப்பிள்ளை ரோலுக்கு கூப்பிட்டா கூட வருவார் போல.

முதல் படம் கொடுத்த வெற்றியில் எந்தக் கவலையும் படாமல் ஒரு சுமாரான படத்தை எடுத்திருக்கிறார் சுந்தர்.சி. மக்கள் இந்த பேயையும் கொண்டாடுவார்களா? அல்லது பேயடிச்சு ஓடுவார்களா? என்பது கூடிய விரைவில் தெரியும்!.

Comments

comments