த்ரிஷ்யம் (ஹிந்தி) – விமர்சனம்

drishyam

தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிகண்ட த்ரிஷ்யம் தற்போது ஹிந்தியிலும் திரை கண்டிருக்கிறது. டொம்பிவிலி ஃபாஸ்ட், மும்பை மேரி ஜான் படங்கள் மூலம் கவனத்தை பெற்ற நிஷிகாந்த் கமத் இயக்க அஜய் தேவ்கன் நாயகனாய் நடித்திருக்கிறார்.

கோவாவில் இருக்கும் பொண்டோலெம் எனும் சிற்றூரை சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் விஜய். கடின உழைப்பால் முன்னேறிய நபரென்பதால் சுற்று வட்டாரத்தில் தனக்கென ஒரு மரியாதை உருவாக்கி கொண்டவர். மனைவி மற்றும் இரு மகள்கள் என இருப்பதை வைத்து நிம்மதியாய் வாழும் இந்த நடுத்தர குடும்பத்தில் எதிர்பாராத புயல் வீசுகிறது. ஐ.ஜி.மீராவின் ஒரே மகன் திடீரென மாயமாக அதற்கு காரணம் விஜய்யின் குடும்பமாகத்தான் இருக்க வேண்டுமென என நினைத்து போலீஸ் சந்தேகப்பார்வையை திருப்புகிறது. இதிலிருந்து தப்ப விஜய் வகுக்கும் வியூகங்கள் என்ன?

தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் ரீமேக் செய்யப்பட த்ரிஷ்யங்கள் ஒரிஜினலின் சாயலில் இருந்த பெருமளவு விலகாமல் இருந்தன. அந்த அளவிற்கு எளிமையான சூழல் மற்றும் கதாபாத்திர தேர்வுகளில் கவனம் செலுத்தி இருந்தார் ஜீது ஜோசப். ஆனால் அப்படியே ஜெராக்ஸ் எடுப்பதில் நிஷிகாந்திற்கு உடன்பாடில்லை. எனவே சின்ன சின்ன மாற்றங்களை கதை மற்றும் கதாபாத்திர தன்மைகளை சோடை போகாமல் செய்து ரசிக்க வைத்திருக்கிறார்.

முக்கியமாக விஜய்யின் மூத்த மகள் தத்தெடுக்கப்பட்டவள் எனும் உண்மையை சொல்வது. அடுத்ததாக ‘சம்பவம்’ நடந்த சமயத்தில் த்ரிஷ்யத்தின் நாயகன் தனியே சென்று தியேட்டர், ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் ரசீதுகளை வாங்கி வருவதாக வரும் காட்சி.  ஏ.டி.எம்மில் விஜய் பணம் எடுக்கும் நிகழ்வை சேர்த்து அதனை விசாரணையின் அத்யவாசிய கட்டத்திற்கு பயன்படுத்தி இருப்பது சிறப்பு. விஜய்யின் எளிமையான இல்லம், உணவகம் மற்றும் செட் போடப்பட்ட காவல் நிலையம் ஆகிய மூன்றும்தான் த்ரிஷ்யத்தின் மிக முக்கியமான லொக்கேஷன்கள். ஒரிஜினல் மற்றும் தெற்கத்திய ரீமேக்குகளின் தாக்கம் இல்லாமல் தனிக்கவனம் செலுத்தியுள்ளனர். நடுத்தர குடும்பமென்று சொல்லப்பட்டாலும் பழங்கால வடிவமைப்புடன் கூடிய விசாலமான இல்லம்,  அசல் கட்டிட அமைப்பு கொண்ட காவல் நிலையம் மற்றும் மார்ட்டின் உணவகம் என களங்களை இன்னும் நம்பகத்தன்மையுடன் கண்முன் நிறுத்தி இருக்கிறார்கள்.

இக்கட்டான சூழலில் குடும்பம் இருக்கும்போது அதிகம் உணர்ச்சி வசப்படாமல் விவேகமாய் செயல்பட வேண்டிய கட்டாயம் த்ரிஷ்யம் நாயகனுக்கு உண்டு. அதற்கு பொருத்தமானவர் அஜய் தேவ்கன் என்றாலும் எல்லை மீறிய அடக்கம் தொய்விற்கு வழி வகுக்கிறது. போலீஸின் கழுகுப்பார்வையில் இருந்து தன் வீட்டு பெண்களை காப்பாற்ற போராடும்போது தேவ்கனிடம் தீவிரத்தன்மை போதுமான அளவு இல்லாமல் போய் விடுவது ஏமாற்றம். இவரது மனைவியாக வரும் ஷ்ரியா இன்னொரு மைனஸ். பருவ வயதுடைய பெண்ணுக்கு தாயார் என நம்ப முடியவில்லை. அந்த அளவிற்கு இளமை ஊஞ்சலாடுகிறது. நடிப்பிலும் வெகுவாய் பின்தங்கி விடுகிறார்.

விஜய்யின் மூத்த மற்றும் இளைய மகள்களாக முறையே இஷிதா மற்றும் ம்ருனால். செல்ஃபோன் வீடியோ காட்டி மிரட்டுபவனை தாக்கும் வரை கூட சுமாராய் நடிப்பவர் அதன் பிறகுதான் விழித்துக்கொள்கிறார். கடுமையான விசாரணையின்போது அதனை சமாளிப்பதிலும், பிற்பாடு அழுதவாறு உண்மையை சொல்லும்போது ம்ருனாலின் மிரட்சியான முகபாவங்கள் பிரமாதம். ‘கேபிள் டிவிக்காரன்தான் குற்றவாளி’ என்பதை உயரதிகாரிகளுக்கு நிரூபிக்க படாதபாடும் படும் இன்ஸ்பெக்டர் காய்கொன்டேவாக கம்லேஷ் சாவந்த். அஜய் தேவ்கன் படங்களை பார்த்து நொந்த ஒரு நபரை தேடிப்பிடித்து நடிக்க வைத்திருக்கிறார் போலும் நிஷிகாந்த். அதனால்தான் தேவ்கனை இவர் வெளுக்கும் காட்சி அவ்வளவு தத்ரூபமாய் வந்திருக்கிறது. தேவ்கனை விட தபுதான் த்ரிஷ்யத்தின் முதுகெலும்பாய் இருக்கப்போகிறவர் என்பதால் அவருக்காக ஒரு சிறப்பு இன்ட்ரோவும் தரப்பட்டிருக்கிறது. ‘க்ரிப்’பான ஐ.ஜி.யாக இரண்டாம் பாதி முழுக்க ஆக்ரமிக்கிறார். துணைவராக வரும் ரஜத் கபூரின் நடிப்பும் நிறைவு.

தேவ்கன் போன்று சோம்பல் செறிந்த முகங்கொண்டநாயகன் இருந்தும் இப்படம் வெகுவாக ரசிக்க வைக்கிறதென்றால் அது ஜீதுவின் திரைக்கதை மாயம் என்பதில் சந்தேகமில்லை. முந்தைய த்ரிஷ்யங்களை பார்த்தவர்களுக்கு ‘மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டுமா?’ எனும் சலிப்பை ஏற்படுத்தவில்லை. முன்பு சொன்னதுபோல புதிதாய் பார்க்கும் உணர்வை தரும்படி நிஷிகாந்த் செய்திருக்கும் மாற்றங்களே அதற்கு காரணம். எனவே இம்முறையும் வெற்றிக்கனியை ருசித்திருக்கிறது த்ரிஷ்யம்.

Comments

comments