கெத்து – விமர்சனம்

நமக்கு நாமே கொள்கையின்கீழ் ரெட் ஜெயண்ட் மூவிஸ் படங்கள் மூலம் ஹீரோ அரிதாரம் பூசி வரும் உதயநிதியின் பொங்கல் ரிலீஸ் கெத்து. சந்தானம் ஹீரோவாக நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி தந்த அநாசய வெற்றியை தொடர்ந்து இது கதிர்வேலன் காதல் மற்றும் நண்பேன்டா படங்களிலும் சைடு ரொமாண்டிக் ஹீரோவாக திரையில் தோன்றினார். இரண்டுமே பப்படமாகி விட ‘இனி பொறுப்பதில்லை. முடியட்டும். விடியட்டும்’ என கொந்தளித்து ரொமாண்டிக் காமடி, சந்தானம் போன்ற கவச குண்டலங்களை கடாசி ஆக்சன் அவதாரம் எடுத்துவிட்டார். இயக்கம் ‘மான் கராத்தே’ திருக்குமரன்.

கதை: அழகிய கம்பம் பள்ளத்தாக்கோரம் குடும்பத்துடன் அமைதியாய் வாழ்ந்து வருபவர் உடற்பயிற்சி ஆசிரியர் துளசிராமன். பள்ளிக்கு எதிரே அண்ணன் ராஜேந்திரனின் ஆசியுடன் மதுக்கடையை வைக்கிறான் கந்தன். குடிகாரர்களால் மாணவிகளுக்கு தொந்தரவு ஏற்பட காவல்நிலையத்தில் புகார் தருகிறார் துளசி. புகாரை வாபஸ் வாங்க சொல்லி கந்தன் மிரட்ட அவனை புரட்டி எடுக்கிறான் துளசியின் மகன் சேது. இருதரப்பிற்கும் மோதல் வலுக்கும் சமயத்தில் இன்னொரு மர்ம நபரின் இடையூறும் இணைந்து கொள்கிறது. எப்படி சமாளிக்கிறான் துப்பறியும் சேது?

உதயநிதிக்கு பிஞ்சு முகம் என்பதால் ஆக்சன் ஹீரோ ரேஞ்சுக்கு டிங்கரிங் செய்வது லேசுப்பட்ட காரியமல்ல. தலைமுடியை தூக்கிவாரி, அடர்த்தியாய் தாடி வைத்து ஆனதை செய்திருக்கிறார்கள். ஆனாலும் அரை தூக்கத்தில் எழுந்தது போன்ற முக பாவனையும், மென்மையான குரல் வளமும் போதிய தம் கட்ட உதவவில்லை. ஏமி ஜாக்சனை தமிழ்க்குடும்ப பெண்ணாக நம்ப வைக்க பாரம்பரிய சுருக்கமெல்லாம் எதற்கு? குஷ்பு, ரம்பா போன்ற மும்பை நடிகைகளையே குக்கிராம மாமன் மகளாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு இதெல்லாம் ஜகஜமப்பா.

சத்யராஜுக்கு ஃபீல் குட் அப்பா வேடமென்பதால் ஓரளவு ஃபீல் பண்ணி இருக்கிறார். நாயகனின் நண்பன் கம் போலீஸ்காரராக கருணாகரனின் பெர்ஃபாமன்ஸ் ஓகே. மதுக்கடை முதலாளி கந்தனாக மைம் கோபி. வாட்டசாட்டமான தோற்றத்தில் சற்று பீதியை கிளப்பினாலும் உதயநிதியிடம் உண்டைக்கட்டி வாங்குவது கெத்தாக இல்லை. அண்ணன் ராஜேந்திரனாக வருபவராவது டப் ஃபைட் குடுப்பாரென்று பார்த்தால் கோர்ட்டில் கத்தியை வைத்து தமாசு செய்வதோடு சரி. கூடவே முன்னாள் கவர்ச்சி சூறாவளி அனுராதா காட்டும் வில்லித்தனம் போனஸ் தமாஷ்!!

நூலகம் காக்கும் மேதையாக கௌரவ வேடத்தில் ‘அச்சமில்லை அச்சமில்லை’ ராஜேஷ். இவருக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் ஓல்ட் மாங்க் ரக விக்குகள் இன்னும் புழக்கத்தில் இருப்பது ஆச்சர்யம்.

ஒப்பந்த கொலையாளியாக (தமிழில் சொல்ல வேண்டுமெனில் கான்ட்ராக்ட் கில்லர்) விக்ராந்த். யாரை கொல்ல ஆயுதம் தாங்கி அலைகிறார் என்பது சஸ்பென்ஸ். கிட்டத்தட்ட ஹீரோவுக்கு இணையான வாய்ப்பு. போதுமான அளவு பயன்படுத்திக்கொள்ளவில்லை. இவருக்கு நடிக்கவே வராது என்பதால் வசனம் தராமலே காப்பாற்ற பார்த்திருக்கிறார் இயக்குனர். ஆனாலும் தாண்டியது அரை கிணற்றைத்தான்.

பார் ஓனருக்கும், பள்ளி வாத்தியாருக்கும் நடக்கும் ஒரு சாதா மோதல். அதனை பில்ட் அப் செய்து இறுதிவரை ஒப்பேற்றுவது கடினம் என்பதால் விக்ராந்த் கேரக்டரை நுழைத்து சர்வதேச ரேஞ்சுக்கு ஜிகினா காட்டியிருக்கிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் பெரிதாய் சோபிக்கவில்லை.

படத்தின் அசுரபலம் சுகுமாரின் ஒளிப்பதிவு. ஹாலிவுட் திரைப்படம் பார்ப்பது போன்ற பிரமிப்பை ஒவ்வொரு ஃப்ரேமிலும் தந்து அசத்தியிருக்கிறார். ஆனால் கெத்தின் பலவீனமாய் படுவதும் இந்த அதி அலங்காரம்தான். ஒளிப்பதிவை தவிர்த்து பார்த்தால் இது ஒரு சாதாரண த்ரில்லர் என்பது எளிதாக புலப்படும். மான் கராத்தேவில் செய்த தவறை இங்கும் செய்திருக்கிறார் இயக்குனர் திருக்குமரன். தொழில்நுட்ப கலைஞர்கள் மீது பாரத்தை போட்டுவிட்டு இயக்கும் வித்தைக்கு இளைப்பாற நேரம் தந்தால் எப்படி சரிப்படும்? உதயநிதி போன்ற ஒரு ஹீரோ இதுபோன்ற அதிரடி ஏரியாவிற்கு புதியவர் என்பதும் முக்கிய மைனஸ்.

மதுக்கடை தகராறு அல்லது விக்ராந்தை மோப்பம் பிடித்தல். இவ்விரண்டினில் ஒன்றை வைத்து விறுவிறுப்பாக கதை செய்திருந்தால் குறைந்தபட்ச உத்திரவாதம் இருந்திருக்கும். வாய்ப்பை தவற விட்டிருக்கிறது கெத்து டீம்.

Comments

comments