கதகளி – விமர்சனம்

குறுகிய இடைவெளியில் மூன்று படங்கள் ரிலீஸாவது ஹீரோக்களுக்கே அரிதாகிப்போயிருக்கும் காலத்தில் பசங்க 2, கதகளி, இது நம்ம ஆளு என வரிசையாக திரையை தொடுகின்றன இயக்குனர் பாண்டிராஜின் படைப்புகள். பாயும் புலி விஷாலுக்கு கைகொடுக்கவில்லை. கதகளி இருவரின் கூட்டுத்தயாரிப்பு. சந்தையில் விலை போகும் அம்சங்கள் இருந்தால் மட்டுமே வியாபாரத்திற்கு உடன்படும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தின் விநியோக உரிமையை எடுத்திருக்கிறது.

கதை: கடலூரின் மீனவர் சங்கத்தலைவர் தம்பா. தன்னை மீறி எவரும் தொழிலில் போட்டிக்கு வந்துவிடக்கூடாது என நினைப்பவர். எதிர்த்தால் எமலோகம் உறுதி. ‘தம்பா என்ன பெரிய கொம்பா?’ என நினைக்கும் நபர் ஒருவர் அவனை கொன்று போட பதறுகிறது கடலூர் வட்டாரம். கொன்றது யாராக இருக்கக்கூடும்?

‘ஊர்லயே பெரிய கை தம்பா. கட்டப்பஞ்சாயத்து, அடிதடின்னு இவன மிஞ்ச ஆளே இல்ல..’ என்று வாய்ஸ் ஓவரில் வில்லபுராணம் ஒலித்தாலே எப்படிப்பட்ட படமாய் இருக்கும் என்பதை யூகித்து விட முடியும். இதுபோக ‘தம்பாவுக்காக என்ன வேணாலும் செய்ய ரெண்டு பேரு. ஒருத்தன் பேரு…’ என பில்ட் அப் செய்தால் இன்னும் சுத்தம். ஆனால் இயக்குனர் பாண்டிராஜின் கண்ணாமூச்சி ஆட்டம் பெருமளவு ரசிக்க வைக்கவே செய்கிறது.

சாம, தான, பேதங்களை கடைப்பிடித்தும் சரிப்படாவிட்டால் தண்டத்தை கையில் எடுக்கும் நாயகன் பாணி விஷாலுக்கு பிடித்தமானது. இங்கும் அவ்வாறே. வெளிநாட்டில் படித்துவிட்டு வரும் அமுதவேல் காதலில் விழுகிறான். எதிர்பாராத பிரச்னை குடும்பத்தை ஆட்டுவிக்கிறது. நியாயத்தை எடுத்துரைத்தும் உரிய ஆட்கள் செவிமடுக்காமல் போக கதகளி ஆட்டம் ஆரம்பம். ரோஜா பூந்தோட்டமாக காத்ரின் த்ரெசா. நட்பிற்காக (மட்டும்) கருணாஸ். முகநூல் புகழ் பாடகி கல்பனா அக்காவை பகடி செய்யும் கேரக்டரில் க்ரேஸ் கருணாஸ். இதற்கு கல்பனா அக்காவே பரவாயில்லை.

கதையின் மையப்புள்ளியாக மதுசூதன ராவ் (தம்பா). புன்முறுவல் மூலமே வில்லத்தனம் காட்டுவதில் ஜித்தர். நடிக்க இன்னும் வாய்ப்பு தந்திருக்கலாம். இவரது வல, இடது கைகளாக வரும் நபர்களும் 12th மேன்களாக வந்து செல்வது சறுக்கல். இக்குறைகளை நிவர்த்தி செய்வது போலீஸ்காரராக வரும் ஸ்ரீஜித்தின் நடிப்புதான். ‘சொன்ன இடத்திற்கு வந்து சேர்’ என விஷாலை ஆட்டுவிப்பதில் அலட்டல் இல்லாத கறார்த்தனம். கதகளியின் திரைக்கதை வேகம் பிடிப்பது இவரது வருகைக்கு பிறகுதான்.

எதிரிகளை சம்பாதித்து வைத்திருக்கும் நபர் கொல்லப்பட்ட பிறகு அதற்கு காரணமாய் இருப்பவர் யாராக இருக்கக்கூடும் எனும் புதிரான களத்தை பரபரப்பாக கையாண்டிருப்பதில் வெற்றி கண்டிருக்கிறார் பாண்டிராஜ். அசல் குற்றவாளி யாராக இருக்கக்கூடும் எனும் பதற்றத்தை நம்முள் கிளப்பி விட்டிருப்பது அருமை.

விஷால் மற்றும் அவரது குடும்பத்தாரை விசாரிக்கும் ஸ்ரீஜித் சில நிமிடங்கள் கழித்து குடும்பத்தாரை விசாரணை ஸ்பாட்டில் இருந்து கிளம்ப அனுமதிப்பது லாஜிக் குறை. கடுக்கண் குடுக்க முயற்சிப்பதில் கைதேர்ந்தவர் விஷால் என்பது ஒருபுறம், தம்பாவின் பூத  உடலை வைத்துக்கொண்டு அவனது குடும்பத்தார் செய்யும் சட்டம் ஒழுங்கு பிரச்னை மறுபுறம். இப்படியானதொரு அசாதாரண சூழல் எளிதில் விஷால் குடும்பத்தாரை விடுவிக்க வேண்டிய அவசியமெதற்கு?

கதகளியை ஆக்சன் த்ரில்லர் என்பதை விட மர்டர் மிஸ்டரி த்ரில்லர் என்று சொல்லலாம். இதில் விஷாலுக்கு செஃல்பி சண்டையெல்லாம் வைத்து அதீத ஹீரோயிசம் எதற்கு? ஃப்ளாஷ்பேக்குகள் மூலம் திரைக்கதையை திறம்பட செப்பனிட்ட பாண்டிராஜ் இறுதியில் தடாலடி திருப்பங்கள் என்கிற பெயரில் தடம்புரண்டிருப்பது கதகளியின் இறங்குமுகம். மற்றபடி உருப்படியான த்ரில்லருக்கான குறைந்தபட்ச உத்திரவாதத்தை தந்திருக்கும் படமிது.

Comments

comments