மாஞ்ஜி த மவுன்ட்டன் மேன் – விமர்சனம்

manjhi

உத்தமசீலர்கள் உலவும் தேசமிது. கோட்டிற்கு அந்தப்பக்கம் இருந்தால் கெட்டவர்கள். இந்தப் பக்கம் இருந்தால் கேடு கெட்டவர்கள். அவ்வளவுதான் வித்யாசம். இப்படிப்பட்ட தேசத்தில் 22 வருடங்கள் தன்னந்தனியே உழைத்துருகி தனது கிராம மக்களுக்காக மலையை குடைந்து ரோடு போட்ட ‘சூப்பர் மேன்’ தஸ்ரத் மாஞ்ஜி. ‘மவுன்ட்டன் மேன்’ என்று சொன்னால் பீஹாரில் பிரபலம். தஸ்ரத்தின் கரடுமுரடான வாழ்க்கை போராட்டத்தை பதிவு செய்திருக்கிறது இப்படம். இயக்கம்: பரேஷ் ராவல் மற்றும் ஆமிர்கான் நடிப்பில் சர்தார் (படேல்), மங்கள் பாண்டே ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்த கேதன் மெஹ்தா.

முஸாஹர் எனும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் வசிக்கும் ஊர் கெஹ்லூர் (பீஹார்) ஒரு பஞ்சபூமி.  அத்யவாசிய தேவைகளை நிறைவேற்றவும், நித்தம் வேலைக்கும் செல்லவும் கெஹ்லூருக்கு குறுக்கே நிற்கும் மலையை சுற்றி 55 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். பெரும்பாலும் நடைப்பயணம்தான். கெஹ்லூர் உள்ளிட்ட சில ஊர்கள் ஆதிக்க சாதியினரின் பிடியில். செருப்பு போட்டு நடந்தாலோ, நேருக்கு நேர் பார்த்தாலோ கூட சவுக்கடி, துப்பாக்கி சூடு, கற்பழிப்பு. கேட்பார் யாருமில்லை. வெளியூரில் வேலை பார்த்துவிட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊரான கெஹ்லூருக்கு வருகிறான் மாஞ்ஜி. தன்னை பால்ய விவாகம் செய்துகொண்ட பகுனியா இளமை ததும்ப தேவதையாக கண்முன் நிற்கிறாள். வசதி இல்லாதவன் என்கிற காரணத்தை காட்டி தஸ்ரத்துடன் மகளை அனுப்பி வைக்க மறுக்கிறார் அவளது தந்தை. எனினும் பகுனியாவை கடத்தி சென்று விடுகிறான் தஸ்ரத். இருவரும் இன்பமாக வாழ்க்கையை கழித்து வருகையில் ஏற்படுகிறது ஒரு அசம்பாவிதம். குடிநீர் பானையை சுமந்து வரும் பகுனியா கால் சறுக்கி மலையில் இருந்து விழுந்து உயிர் துறக்கிறாள். ‘கர்ப்பவதியான எனது மனைவியை காவு வாங்கி விட்டாயே’ என அந்த மலை மீது வெறுப்பை உமிழ்கிறான். ‘உன்னை உடைத்து நொறுக்கினால்தான் எனது கோபம் தீரும்’ என மாஞ்ஜி எடுக்கும் சபதம் ஊராரின் விடியலுக்கான துவக்கமாகவும் அமைகிறது.

தி மவுன்ட்டன் மேனாக நவாசுதீன் சித்திக்கி. கண்ணை பறிக்கும் உடை மற்றும் கருப்பு கண்ணாடி சகிதம் ஊரினுள் என்ட்ரி தருபவர் ராதிகா ஆப்தேவின் கண்களில் தங்கி கலாட்டா செய்யுமிடம் கலகலப்பு. எடுத்தவுடன் மலை, உளியென சீரியஸ் ஆகாமல் சினிமாத்தன காதல் கொண்டாட்டங்கள் களத்தை ஆக்ரமிக்கின்றன. சபாஷ் சரியான போட்டி என சொல்லும் அளவிற்கு நவாசும், ராதிகாவும் ஊடல் – கூடல் விளையாட்டில் ரசிக்க வைக்கின்றனர். தாஜ்மஹால் பொம்மையை காட்டி ‘ஆசை மனைவிக்காக அரசன் ஒருவன் எழுப்பிய காதல் சின்னம் இது.. தெரியுமா?’ என தஸ்ரத் கேட்க ‘இத்தாஸா?’ (இவ்வளவு சிறியதாகவா கட்டினான்?) என ஆச்சர்யம் பொங்க ராதிகா அப்பாவித்தனமாக கேட்பது ச்சோ ச்வீட்.

சட்டுபுட்டென மையக்கதைக்கு வந்துவிட்டால் ‘கலக்சன்’ பார்ப்பது எப்படி என்பதை உணர்ந்து கடமையில் கருத்தாக இருந்திருக்கிறார் இயக்குனர் கேத்தன். எனவே மலையின் மீது போர்வையை போர்த்திவிட்டு ராதிகாவின் முதுகுப்பிரதேசத்தை மலையளவு நம்ப வேண்டிய கட்டாயம். இந்த குலாவல் தம்பதிகள் எபிசோடில் இருக்கும் நிஜத்தன்மை மாஞ்ஜியின் மலையுடைக்கும் தருணங்கள் மற்றும் சாதிய அடக்குமுறைகளில் இல்லாமல் போகிறது.  சில முக்கிய கதாபாத்திரங்கள் ஹிந்தியிலும், மற்றவர்கள் பீஹாரியிலும் பேசி தடுமாற வைக்கிறார்கள். எதற்கு இந்தக்குழப்பம்? ஆங்கிலத்தில் சப்டைட்டில் போடுவதால் பெருமூச்சு விடமுடிகிறது. தஸ்ரத்தின் மகன் மற்றும் மகளாக வருபவர்கள் மற்றும் சிலர் கதை சூழலுடன் கொஞ்சமும் ஒட்டாமல் போகிறார்கள். காஸ்டிங் டைரக்டருக்கு சம்பளம் சரியாக போய் சேரவில்லை போல.

கிடைத்த கேப்பில் எல்லாம் கச்சிதமாய் கோல் போடும் நவாசுதீனுக்கு ‘மாஞ்ஜி’ போன்ற படங்கள் பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பு போல. ஐந்திற்கு நான்கு கோல்கள் அடித்துள்ளார். இயல்பாய் நகர வேண்டிய கதைக்கு ஆங்காங்கே செயற்கை சாயத்தை இயக்குனர் பூசி இருப்பதால் அந்த பெயிண்ட் டப்பாவின் கறை நவாசின் மீதும் தெறிக்கப்பட்டு இருப்பது மைனஸ். கையில் பணம் இல்லாததால் பிரதமர் இந்திராவை சந்திக்க  பீஹாரில் இருந்து தில்லிக்கு 1,300 கிலோ மீட்டர் தூரம் கால்நடையாகவே வந்தடைகிறார்  தஸ்ரத். அப்போது அங்கு ஏற்கனவே நடந்துவரும் போராட்ட பேனர் ஒன்றை எதேச்சையாக போர்த்திக்கொண்டு தஸ்ரத் நடந்துகொண்டிருக்க சம்மந்தமே இல்லாமல் போராட்டக்கார்கள் இவருக்கு பின் அணிவகுத்து செல்வது எல்லாம் அக்மார்க் சினிமாத்தனம்.

தஸ்ரத்தின் தனிப்பட்ட வாழ்க்கை, தஸ்ரத்திற்கும் மலைக்குமான தொடர்பு மற்றும் கெஹ்லூரில் நடக்கும் சாதீய அடக்குமுறை என மூன்றிற்கும் சமமான ஸ்கோப்பை தர பிரயத்தனப்பட்டு இருந்தாலும், யதார்த்த நிலையில் இருந்து அவ்வப்போது விலகி நிற்கிறது ‘மாஞ்ஜி’. இதனை உருப்படியான ஆவணப்படமாக எடுக்காமல் திரைப்படமாக சமைத்ததன் விளைவுதான் இப்படி ஒரு குழைவான அவுட்புட்.

வெளியுலகிற்கு பெரிதும் பரிச்சயமாகாத போராளிகளின் வாழ்க்கையை சிறந்த திரைப்படமாக எடுக்க நினைப்பது பாராட்டத்தக்க விஷயம். ஆனால் பாத்திரங்கள் சரியாக இருந்தாலும் பண்டங்களை பக்குவமாய் இறக்கி வைப்பதில் சமையல்காரர்களுக்கு பயிற்சி போதாமலே இருக்கிறது. மேரிகோம், கௌர் ஹரி தஸ்தான் வரிசையில் மாஞ்ஜியும் இதற்கு ஓர் உதாரணம்.

நவாசுதீனின் சிறந்த நடிப்பிற்காக ‘மாஞ்ஜி’ யை அவசியம் காணலாம் (தேசிய விருது உள்ளிட்ட பல அங்கீகாரங்கள் இவருக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம்). ஆனால் படத்தில் இவரது நடிப்பை தவிர்த்து ‘அதுக்கும் மேல’ எதிர்பார்த்தால் காணக்கிடைப்பது மலையல்ல குன்றுதான்.

Comments

comments