ரஜினிமுருகன் – விமர்சனம்

Rajini Murugan

எதிர்பார்த்ததை விட சூறாவளி ஹிட்டடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் அங்கத்தினர்களான பொன்ராம், சிவகார்த்திகேயன், சூரி மற்றும் இமான் ஆகியோர் தற்போது பொங்கல் சந்தையில் கடைபோட வந்திருக்கிறார்கள். அஞ்சானும், உத்தமவில்லனும் தந்த அடியில் நொந்து போயிருக்கும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பிது.

கதை: பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து செட்டில் செய்த நிம்மதியுடன் வாழ வைத்த பெரியவர் அய்யங்காளைக்கு ஒரே துணை…உருப்படாத பேரன் ரஜினிமுருகன். சொத்தினை விற்று பங்குகளை பிரித்துவிட்டால் பேரனுக்கு உதவியாக இருக்கும் என பெரியவர் முடிவு செய்யும் சமயம் ‘நானும் உங்க பேரன்தான்’ மூக்கை நுழைத்து சிக்கலை உருவாக்குகிறான் ஏழரை மூக்கன். தாத்தாவும், அசல் பேரனும் இந்த தலைவலிக்கு எப்படி வைத்தியம் பார்க்கிறார்கள்?

கோவில் காளை போல ஊரை சுற்றும் ஹீரோ, ஒத்துக்கு ஒரு காமடியன், மாமன் மகளை கைப்பிடிக்க திட்டம் தீட்டுவது. பழையன பெரிதாய் கழியவில்லை என்றாலும் பண்டிகைக்கால புதுச்சட்டை, புடவை போல அம்சமாக பேக் (pack) செய்து தந்திருக்கிறார் இயக்குனர் பொன்ராம். மான் கராத்தே, காக்கிச்சட்டை போன்ற சீரியஸான களங்கள் சிவகார்த்திகேயனுக்கு கம்பர்ட்டாக இருக்கவில்லை என்பதை உடல்மொழியே காட்டித்தந்தது. ஆனால் ரஜினிமுருகன் இவரது அபிமான களம். சொல்லி அடித்திருக்கிறார். தனது காமடிகள் பெரிதாய் எடுபடாமல் போய் தொய்வினை சந்தித்து வரும் சமயத்தில் சூரிக்கு இப்படம் ஆக்ஸிஜன் நிவாரணம். ஆடி கார் சோதனை ஓட்டம், டீக்கடை வாழைப்பழ ரகளை, ‘என்னையா?!’ பஞ்ச் வசனம் என இவ்விருவரின் கூட்டணி செய்யும் அலப்பரைகள் விசிலடி கொண்டாட்டம்.

கொள்ளை அழகு பொங்க சர்க்கரை பொங்கலாக கீர்த்தி சுரேஷ். அளவான புன்னகையுடன் ஆளை மயக்கும் அப்சரஸ். நடிக்கவில்லையென குறைபட்டுக்கொள்ள அவசியமே இல்லை. இன்னும் பத்து வருடம் கழித்து நடித்துவிட்டு போகட்டுமே? குடியா மூழ்கி விடும்? காத்திருப்போம். காமடி, சென்டிமென்ட் என சரியாக பேலன்ஸ் செய்து தொடை தட்டி இருக்கிறார் ராஜ்கிரண். ஏழரை மூக்கனாக சமுத்திரக்கனி. சமூக சீர்திருத்தவாதி கேரக்டரில் வராதது பெரிய ஆறுதல். தேவையின்றி குடைச்சல் தரும் நபராக சிறப்பாய் ஸ்கோர் செய்திருக்கிறார்.

முக்கிய துணை நடிகர்கள் முதல் மற்றும் சில நொடி தலைகாட்டும் நபர்கள் வரை பார்த்து பார்த்து தேர்வு செய்திருக்கிறார் பொன்ராம். இப்படத்தின் கவனிக்கத்தக்க துணை நடிகர் என்றால் அது கீர்த்தியின் தந்தையாக வரும் அச்யுத் குமார் தான். எண்பதுகளில் தீவிர ரஜினி ரசிகனாய் இருந்து மத்திய வயதை தாண்டியிருக்கும் சூப்பர் ஸ்டார் பக்தனை கச்சிதமாய் பிரதிபலித்திக்கும் விதம் அருமை. குடும்பத்தில் பிரச்னை வரும்போது தனது தலைவனின் புத்திமதிகளை உதாரணமாய் காட்டுவதிலும்,  மிச்சம் மீதி இருக்கும் தலைமுடியை ரஜினி போல சிலுப்புவதிலும் அதகளம் செய்திருக்கிறார் மனிதர்.

இமானின் இசையில் ஆவி பறக்கும் டீக்கட, உம்மேல ஒரு கண்ணு, ரஜினிமுருகன், என்னம்மா என அனைத்து பாடல்களும் ரசிக்க வைக்கின்றன.

இருக்கிற கொஞ்ச நஞ்ச சரக்கையும் தீர்த்துவிட்டு இரண்டாம் பாதியில் அல்லாடாமல் ஊர் பஞ்சாயத்து சமாச்சாரங்களை வைத்து சுவாரஸ்யமாய் காட்சிகளை நகர்த்தி ஜெயித்திருக்கிறார் பொன்ராம். ‘குடும்பத்துடன் காண வேண்டிய பொழுதுபோக்கு சித்திரம்’ என்று அனைத்து படங்களுக்கும் விளம்பரம் செய்யப்பட்டாலும் அதில் தேறுவது ஓரிரண்டு மட்டுமே. அவ்வகையில் ரஜினிமுருகன் நிச்சயம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு படம். நம்பி போங்க. சந்தோஷமா வாங்க!!

Comments

comments