தல்வார் – விமர்சனம்

talvar

வருடம் 2008. நோய்டாவை (உத்தர பிரதேசம்) சேர்ந்த மருத்துவர்களான ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார்களின் ஒரே மகள் ஆருஷி (14 வயது) வீட்டிலேயே கழுத்தறுபட்டு இறந்து கிடக்கிறாள். பணிப்பெண் மூலம் சுற்றி இருப்போருக்கு தகவல் பரவ ஸ்பாட்டிற்கு வருகிறது காவல்துறை. ஆருஷியை கொன்றது யார் என்பதற்கான முதல் துப்பு கிடைப்பதற்கு முன்பாகவே அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தல்வார்களின் பணியாள்  ஹேம்ராஜின் சடலத்தை கண்டெடுக்கிறார்கள். இரட்டைக்கொலைக்கு காரணமானவர்கள் யார் என்பதை காவல்துறையை விட தீவிரமாக விசாரித்து தீர்ப்பு எழுத துடிக்கின்றன தொலைக்காட்சி சேனல்களும், பத்திரிக்கைகளும். சி.பி.ஐ. வசம் விசாரணை கைமாறியபிறகு இந்த வழக்கு எந்த திசையை நோக்கி சென்றது? இந்தியாவை அதிர வைத்த இந்த இரட்டைக்கொலை விசாரணையை நுட்பமாக அலசி இருக்கிறது மேக்னா குல்ஜாரின் தல்வார்.

கழுகுப்பார்வையுடன் படத்தை பார்த்தால் தல்வார்கள் மீது சற்று கருணைப்பார்வையை இயக்குனர் மேக்னா செலுத்தி இருக்கிறார் என்பது புலப்படும். மற்றபடி இந்திய சினிமா வரலாற்றில் வந்திருக்கும் சிறந்த கொலை விசாரணை த்ரில்லர்களில் தல்வார் இடம்பெற்றிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இன்ஸ்பெக்டர் தனிராமாக கஜ்ராஜ். பீடாவை குதப்பிக்கொண்டு அலட்சியமாக விசாரிக்கும் தோரணை ரணகளம். ஸ்ருதியின் (ஆருஷி) பெற்றோர்களாக நீரஜ் கபி மற்றும் கொங்கனா சென்.  சிறந்த தியேட்டர் ஆர்டிஸ்ட் மற்றும் திரைப்பட நடிகையென அறியப்படும் கொங்கனா சென் இப்படி ஒரு எளிய கதாபாத்திரத்தில் நடிக்க இவ்வளவு சிரமப்பட வேண்டுமா? சால்ட் & பெப்பர் லுக்கும், சோர்ந்த முகமும் மட்டுமே நீரஜ் கபியை கரை சேர்த்திருக்கிறது.

சி.பி.ஐ. அதிகாரி அஸ்வின் குமாராக இர்ஃபான் கான் தோன்றும் நிமிடத்தில் இருந்து ஜெட் வேகத்தில் பயணிக்கிறது தல்வார். குறைந்தபட்ச ரியாக்சன். அதிகபட்ச தாக்கம். இதுதான் இர்ஃபானின் ஸ்டைல். வழக்கம்போல் வாகை சூடி இருக்கிறார். தல்வார்களின் வீட்டில் தங்கி இருக்கும் பணியாட்கள் மற்றும்  சி.பி.ஐ. அதிகாரிகள் வேடங்களுக்கு நச்சென நடிகர்களை தேர்வு செய்திருப்பது இப்படத்தின் ப்ளஸ்.  நட்சத்திர ஈர்ப்பிற்காக இர்ஃபானின் மனைவியாக தபு. இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை கதைக்கு அத்யாவசியமாக படவில்லை.

‘குற்றம். நடந்தது என்ன?’ என்பதை தல்வார்கள், பணியாட்கள் மற்றும் காவல்துறை என ஒவ்வொரு தரப்பில் இருந்தும் முற்றிலும் மாறுபட்ட சாட்சியங்கள். அனைத்தையும் சரியாக மோப்பம் பிடித்து வழக்கை முடித்துவிடலாம் என்று அஸ்வின் குமார் நம்பும்போது ஆதாரங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. விசாரணை அதிகாரி பொறுப்பில் இருந்து அஸ்வின் தள்ளிவைக்கப்பட்டு பால் என்பவர் நியமிக்கப்படுகிறார். நீதிமன்றம் தரும் காலக்கெடு நெருங்குவதால் இரு தரப்பு விசாரணை அதிகாரிகளையும் அழைத்து பேசுகிறார் சி.பி.ஐ. இயக்குனர். தாங்கள் விசாரித்ததே சரியென அனல் பறக்க இவர்கள் வாதம் செய்யுமிடம் தல்வாரின் ஹைலைட். ‘ஆருஷி பணியாளுடன் உடலுறவு வைத்திருந்ததை கண்டு கொந்தளிக்கும் தந்தை இன்னொரு அறையில் இருக்கும் கோஃல்ப் மட்டையை தேடி எடுத்து வந்து மண்டையை பிளந்ததாக சொல்கிறீர்களே? அவ்வளவு நேரம் இருவரும் அதே பொஷிஷனில் படுத்து இருந்தார்களா?’ என கேட்கும் இர்ஃபானின் நக்கல் ஆசம்.

திரைக்கதை, வசனம், பின்னணி இசையென மூன்றிலும் விஷால் பரத்வாஜின் அரசாட்சி. புதிராக இருக்கும் இரட்டை கொலை வழக்கு சம்மந்தப்பட்ட கதையை வெகுஜனங்களுக்கு புரியும் வண்ணம் திரைக்கதை, வசனங்களை அமைத்திருக்கிறார். துருத்தி நிற்காதபடி ஆங்காங்கே நகைச்சுவையை பொருத்தி ரசிக்க வைப்பதோடு, மீடியாவின் அகோர செய்திப்பசியையும் சாடி இருக்கிறது  மேக்னா – விஷால் கூட்டணி.

ஸ்ருதியின் (ஆருஷி) உடலை எரியூட்ட பெற்றோர்கள் காட்டிய அவசரம், அவளது தந்தை ரமேஷுக்கு இருந்த கள்ளத்தொடர்பு பணியாள் ஹேம்ராஜுக்கும், ஆருஷிக்கும் தெரிய வந்தது எப்படி என்பது போன்ற முக்கியமான விஷயங்களை இயக்குனர் எதற்காக வெளிச்சம் போட்டுக்காட்டவில்லை? தல்வார்கள் மீது எதற்காக இப்படி ஒரு சாஃப்ட் கார்னர்?

ராணி முகர்ஜி நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான No One Killed Jessica திரைப்படம் ஜெஸ்ஸிகா லாலின் கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. பெருமளவு மீடியாவின் பார்வையில் அவ்வழக்கு எப்படி கையாளப்பட்டது என்பதை விளக்கிய படம். தற்போது ஆருஷி தல்வாரின் மர்ம மரணத்தை சி.பி.ஐ. எந்த விதங்களில் எல்லாம் விசாரணையை மேற்கொண்டது என்பதை விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறது தல்வார்.  படம் பார்த்து முடித்த பிறகு புலனாய்வுத்துறை அதிகாரியாக இருந்த உணர்வை உங்களுக்குள் ஏற்படுத்தும் இந்த படைப்பு. தவற விடாதீர்

Comments

comments