தாரை தப்பட்டை – விமர்சனம்

Tharai Thappattai

படப்பிடிப்பு சமயத்தில் சசிகுமாருக்கு தலையில் அடிபட்டதால் தாரை தப்பட்டை ரிலீஸ் தாமதமானது என ஒருபக்கம் சொல்லப்பட ‘எல்லா கோட்டையும் அழிங்க. நான் மொதல்ல இருந்து பரோட்டா சாப்புடறேன்’ என்று பாலா அடம்பிடித்தார். எனவே மறுபடப்பிடிப்பு நடத்தி படத்தை முடிக்க படாதபாடு படவேண்டியதாகி விட்டது என்றும் செய்திகள் உலா வந்தன. டைமிங்காக போகி பண்டிகையன்று ரிலீஸாகியுள்ளது பாலாவின் ‘புதிய’ படம். தாரை தப்பட்டை. பாலாவின் B ஸ்டுடியோஸ் மற்றும் சசிகுமாரின் கம்பனி ப்ரொடக்சன் இணைந்து தயாரித்திருக்கும் படைப்பு. இளையராஜாவின் ஆயிரமாவது படம் என்பது தனிச்சிறப்பு.

கதை: முன்பொரு காலத்தில் தஞ்சை வட்டாரத்தின் பிரபல இசைக்கலைஞராக வலம் வந்தவர் சாமிப்புலவர். மரபை மீறாமல் இருப்பதே கலைக்கு தரும் மரியாதை எனும் எண்ணம் கொண்டவரின் புதல்வன் சன்னாசி. தந்தையின் பிடிவாதம் சோற்றுக்கு உதவாது என்பதால் தனது தாரை தப்பட்டை குழுவில் ஜனரஞ்சகத்தை புகுத்துகிறான். காலம் உருண்டோட சன்னாசி குழுவினரின் பாணியும் பழையதாய் போய்விடுகிறது. தனிப்பட்ட வாழ்வில் நடக்கும் ஏமாற்றம் மற்றும் தொழிலில் ஏற்படும் வீழ்ச்சி ஆகியவற்றை எப்படி எதிர்கொள்கிறான் சன்னாசி?

பாலாவிடம் இம்முறை பரிசோதனை எலியாக சிக்கி இருப்பவர் சசிகுமார். இயக்குனரின் முந்தைய படங்களில் நாயகனாய் வந்து நொந்தவர்களுக்கும், ச(ன்னா)சிக்கும் என்ன வித்யாசம்? ஒரு மசுரும் இல்லை என்றாலும் மசுரு சம்மந்தப்பட்ட வித்யாசம் ஒன்று இருக்கிறது. மற்றவர்களைப்போல சன்னாசியின் மண்டை புழுதிமண் நிறத்தில் இல்லை. அவ்வளவுதான். கதாநாயகன் வரலட்சுமி (கதாபாத்திர பெயர் சூறாவளி) மற்றும் நாயகி சசிகுமாருக்குமான வேதியியல் கலவை சிறப்பாய் மிக்ஸ் ஆகியிருக்கிறது. கல்லானாலும் (எதிர்கால) கணவன், ஃபுல் பாட்டில் அடித்தாலும் புருஷன் எனும் முன்னோர் மொழியை உயிர்போகும்வரை பின்பற்றுகிறாள் சன்னாசி. நாயனம் ஊதுனமா, நாலு காசு பாத்தமா என்று வேலையை பார்க்காமல் ‘இந்த சீனை இப்படி மாற்றினால் என்ன?’ வென்று ஸ்பாட்டில் பாலாவிற்கே யோசனை சொல்லி இருப்பார் போல. அதற்காக வரலட்சுமி முதல் வருபவன் போகிறவனை எல்லாம் வைத்து சசியை புரட்டி எடுத்து விட்டார் இயக்குனர்.  கண்ணாடிய திருப்புனா மட்டும் ஆட்டோ எப்படி ஸ்டார்ட் ஆகும் ஜீவா…..!!

நாயகர்களை விட பாலாவிடம் மாட்டிக்கொள்ளும் நாயகிகள் நிலைதான் கொடூரம். ஆனால் பிறப்பிலேயே (ஜம்பலக்கடி) ஜிம்பாடிக்காரர் என்பதால் எதற்கும் அசரவில்லை வரலட்சுமி. பேயாட்டம். பிசாசாட்டம். நடிப்பு நாசமாய் போனாலும் வரலட்சுமியின் அர்ப்பணிப்பை வாழ்த்தியாக வேண்டும். சாமிப்புலவராக ஜி.எம்.குமார். குடித்தலும், கத்தல் நிமித்தமுமாக என்னமோ செய்கிறார். குளிக்கும்போது ஆசி வாங்க வரும் குழுவினரை கண்டு எரிச்சலாகி அலுமினிய குண்டாவை தூக்கி எறிவதோடு நிறுத்திக்கொண்டார். படத்திற்கு ‘A’ சான்றிதழ் தந்திருப்பதால் இடுப்பு துண்டை கழற்றி வீசிவிடுவாரோ என பதற வேண்டியதாகி விட்டது. ச்சே.. பாலா பட ஆர்வலன் எனும் குற்றத்திற்காக எப்படியெல்லாம் சிணுங்க வேண்டி இருக்கிறது?

படத்தின் வில்லனாக தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ். நல்லவனாய் நடித்து கொடூர முகம் கொண்டவனாய் மாறி அதிர்ச்சி தருகிறாராம். பட்டாப்பட்டி போட்ட இந்த தமாசையெல்லாம் நாங்கள் மலேசியா வாசுதேவன், வினு சக்ரவர்த்தி காலத்திலேயே பார்த்து விட்டோம் தோழர். ஓரமாய் அமருங்கள்.

சரி. கதைக்கு வருவோம். தாரை தப்பட்டை மூலம் புதிதாய், புரட்சியாய் என்னதான் சொல்ல முனைந்திருக்கிறார் பாலா என்று பார்த்தால் ஒரு பீப்பும்  இல்லை. தப்பட்டையில் தாரை பூசி அடித்தால் என்ன சத்தம் கேட்கும்? ஆம். அவ்வளவுதான்!!

கிராமிய கலையான கரகாட்டமும், தாரை தப்பட்டையும் சந்திக்கும் வீழ்ச்சி குறித்து சில காட்சிகள் மூலம் தனது பாணியில் எடுத்துக்காட்டி இருக்கிறார் பாலா. குறிப்பாக அண்ணனும், தங்கையும் இணைந்து விரசமாக ஆடிப்பாடுமிடம். ‘ஏன்டா.. நீ வெளக்கு புடிக்க போகல?’, ‘நீதான மாமா உத்து உத்து பாப்ப. உனக்கு அளவு தெரியாதா?’ போன்ற பொளேர் வசனங்களை தருவதில் பாலாவுக்கு நிகரில்லை. மற்றபடி தாரை தப்பட்டையில் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை.

நல்ல கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அதனை சொதப்பித்தள்ளுவது தமிழ் சினிமா படைப்பாளிகள் பலருக்கு கைவந்த கலை. பாலாவை மட்டும் விதிவிலக்காக பார்க்க நினைப்பது அர்த்தமற்றது என்பது நிரூபணமாகியுள்ளது. ‘அம்சமான கலையை ஜனரஞ்சகம் என்கிற பெயரில் அசிங்கப்படுத்துகிறாயே?’ என புலம்பி மாய்கிறார் சாமிப்புலவர். ‘ஜனரஞ்சகமான கலையை விபச்சார கூத்தாக மாற்றிவிட்டார்களே?’ என்றெண்ணி புலம்புகிறான் சன்னாசி. பாலாவின் ஒட்டுமொத்த கதைசொல்லும் திறனும் இதற்குள்ளாகவே அடங்கிவிடுகிறது. பிறகென்ன? உடனிருக்கும் பெண்களின் பின்னந்தலையில் அவ்வப்போது அடித்துக்கொண்டே இருக்கிறான் சன்னாசி. மாமனாருடன் சரக்கடித்து கொண்டாடுகிறாள் சூறாவளி. சொத்தையான அந்தமான் அத்யாயம், மைய கதைக்கு சம்மந்தமே இல்லாத இரண்டாம் பாதி, வன்மம் பொங்கும் க்ளைமாக்ஸ். கதை, திரைக்கதை மற்றும் இயக்கம் என ஒவ்வொரு டிபார்ட்மென்ட்டும் பிச்சை பாத்திரம் ஏந்தி நிற்கிறது ஐயனே… என் ஐயனே!!

இளையராஜாவின் மோதிரக்கையால் குட்டுப்படும் பாக்கியம் கிடைக்குமா என பரிதவிப்பர்கள் ஏராளம். குறைந்தபட்சம் ‘உனக்கு அறிவிருக்கா? என்று அவர் கேட்டால் கூட அது ஆஸ்கர் வாங்கியதற்கு சமமென சிலாகிக்கவும் ஆட்களுண்டு. அப்பேர்ப்பட்ட மாமேதை அமைத்த மெட்டுக்களா இவை? பின்னணி இசை மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் ஓடிப்போய் அமர்ந்துகொண்ட பரிதாபத்தை என் சொல்ல? ‘மோதிரக்குட்டு புகழ்’ அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான அமரர் தாமரைக்கனியின் மோதிரத்தை ஏலத்தில் எடுத்து இளையராஜாவின் தலையில் நங்கென கொட்டி பலநாள் ஆசையை தீர்த்துக்கொண்டு இருக்கிறார் பாலா.

கன்னத்தில் அறைவாங்கி, காலில் மிதிபட்டு உருளும் கேரக்டர்கள் எத்தனை அடி தூரத்தில் விழும் என்பதை துல்லியமாக அளந்து பார்த்து, அதற்கேற்ப ஆங்கிள் பார்த்து, அப்படியே பாலா அங்கிளின் அசைவை பார்த்து… ஒளிப்பதிவாளர் செழியனுக்கு இவ்வாண்டின் சமாதானத்திற்கான நோபல் பரிசை தந்தே ஆக வேண்டும். சண்டைப்பயிற்சி அளித்திருப்பது (மெடிக்கல்) மிராக்கில் மைக்கேல். ‘செங்கல் சைக்கோ போல ஆளாளுக்கு அடிச்சி தொவைங்கப்பா’ என்று சொன்னால் போதாதா? இதற்கு மாஸ்டருக்கு வேறு சம்பளம் தந்து பட்ஜெட்டை ஏற்ற வேண்டுமா?

ஜீரணிக்க கடினமாய் இருக்கும் நிதர்சனங்கள், வன்முறையாட்டம், முகத்தில் அறையும் வசனங்கள் போன்றவற்றை எடுக்க படைப்பாளிக்கு சுதந்திரம் உண்டு. அம்மாதிரியான படைப்புகளை கிரகித்துக்கொண்டு கடந்து செல்லும் பக்குவமும் ஒரு நல்ல திரைப்பட ரசிகனுக்கு தேவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் தாரை தப்பட்டை என்பது ஒரு தட்டையான படைப்பு என்பதுதான் பிரச்னையே. சூறாவளிக்கு ஏழரை மணிக்கு பிள்ளை பிறக்க வேண்டும் எனும் ஏழரை சமாச்சாரம் கதைக்குள் நுழைக்கப்பட்டு மிச்சம் மீதியிருந்த பருக்கைகளையும் அள்ளி சாக்கடையில் வீசினால் நஷ்டம் யாருக்கு? இதனை பாலா உணர வாய்ப்பில்லை. ரசிகர்கள் நிச்சயம் உணருவார்கள். மேலும் விலகுவார்கள்.

Comments

comments